‎கோழிப்பண்ணை‬ நோய்க்கிருமிகளை அழிக்கும் முறைகள்

கோழிப்பண்ணை‬ நோய்க்கிருமிகளை அழிக்கும் முறைகள்
கோழிப்பண்ணை பராமரிப்பில் நோய்தடுப்பு ஒரு முக்கிய பணியாகும். நோய்தாக்கப்பட்ட கோழிகள் வளர்ச்சி குன்றி, முட்டையிடும் திறன் குறைந்து பண்ணையில் லாபத்தைப் பாதிக்கும்.
கோழிகளைத் தாக்கும் நோய்களை பலவகைப்படுத்தலாம். (உ.ம்.) நச்சுயிரிகிருமிகளால் ( வைரஸ்) ஏற்படும். நோய்கள் பாக்டிரியாக்களால் ஏற்படும் நோய்கள். களான்வகைகள். ஒட்டுண்ணிகள் ஆகியவற்றால் ஏற்படும் நோய்கள்.
பராமரிப்பு முறையினால் வரும் நோய்கள் ஆகும்.
நோய்கிருமிகளை அழிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முக்கிய வழி முறைகள் :
முட்டை இட்டு ஓய்ந்த கோழிகளை விற்றபின் கோழிப்பண்ணையிலுள்ள உபகரணங்கள், பழைய குப்பைகள், தீவன தண்ணீர் தொட்டிகள் ஆகியவற்றை அகற்றி தனித்தனியாகச் சுத்தம் செய்யவேண்டும். தரை மற்றும் பக்கச்சுவர்களைத் தண்ணீர் விட்டு நன்கு ஊறவைத்து சுத்தமாக கழுவவேண்டும். ஆழ்கூளத்தை வெளியில் ஆழக்குழிவெட்டி அதில்கொட்டி மண்போட்டு மூடி மக்கச்செய்ய வேண்டும்.
நோயுற்ற பண்ணையில் பயன்படுத்திய துணிகள், திரைகள் ஆகியவற்றை கொதிநீரில் போட்டு சுத்தம் செய்ய வேண்டும். கம்பிவலை, தூண்கள், குறுக்குக்கம்பிகள், திரைச்சுற்றுப்புறம் ஆகியவற்றிலுள்ள ஓட்டைகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.
பண்ணையில் உள்ள விரிசல்கள், சுவர், தரை உடைசல்களைச் சிமெண்ட்க்கலவை கொண்டு சரிசெய்ய வேண்டும்.
புற ஓட்டுண்ணிகளான பேன், வண்டுகள், செதிள்பூச்சிகள்,ஆக ஓட்டுண்ணிகள், ரத்தக்கழிசல் கிருமிகள் ஆகியவற்றை ஒழிக்க 150 சதுரடிக்கு 10 மில்லி மாலத்தியான் (5 சதம்) மருந்தை 5 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பான் மூலம் தரை முதல் கூரை வரை தெளிக்க வேண்டும்.
கம்போரா, ராணிக்கட் மற்றும் மேரக்ஸ் தாக்கிய பண்ணைகளில் அயோடோபார் மருந்தைப் பயன்படுத்தி ( 200 மில்லி மருந்துக்கு 20 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து) 100 சதுரடிக்கு உயரழுத்த விசைத் தெளிப்பான் மூலம் தெளித்து கிருமிகளை அழிக்கலாம்.
20 கிலோ சுண்ணாம்பு 50 கிராம் பிளீச்சிங் பவுடரைக் கலந்து தரை சுவர் ஆகியவற்றை வெள்ளை அடிக்க வேண்டும்.
கம்போரா போன்ற கொடிய நோய்கள் தாக்கிய பண்ணைகளில் அவற்றை முற்றிலும் அழிக்க 100 கன அடிக்கு 60 கிராம் பொட்டாசியம் பெர்மங்கனேட்டை 120 மி.லி. பார்மலின் கரைசலில் ஊற்றி கோழிக்கொட்டகையின் நடுவில் வைத்து விட வேண்டும்.
இவ்வாறு பார்மலின் புகைமூட்டம் செய்வதற்கு முன்பு நன்கு சுரண்டித் தேய்த்து கழுவிய பண்ணை உபகரணங்களை 10 லிட்டர் தண்ணீருக்கு அரை கிலோ சலவை சோடா கலந்து கழுவவேண்டும்.
தண்ணீர்த் தொட்டி போன்ற உபகரணங்களை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 மி.லி. அயோடோபார் கலந்து அதில் 2 மணி நேரம் ஊரவைத்து பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும். தீவனத்தொட்டியை 30 நிமிடம் ஊறவைத்து பின்பு தண்ணீரில் கழுவவேண்டும்.
இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட உபகரணங்களை கோழிக்கொட்டகையில் வைத்து, சுத்தப்படுத்தப்பட்ட திரைகளைக் கட்டி தொங்கவிட்டு, காற்றுப்புகாதபடி மூடி, கோழிக் கொட்டகையினுள் காற்றின் ஈரப்பதத்தை 70 சதம் இருக்கும்படி செய்ய சாக்குகளைத் தண்ணீரில் நனைத்து கம்பிவலையில் தொங்க விட வேண்டும்.
பின்பு பார்மலின் புகை முட்டம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து நோய்க்கிருமிகளை அழிக்க வேண்டும்.

No comments:

Post a Comment